வறுமையிலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஜெயசூர்யா
       பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருச்செங்கொடு மாணவர் ஜெயசூர்யா மருத்துவம் பயில விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் குடும்ப வறுமை அவரது லட்சியத்திற்கு இடையூறாக உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஜெயசூர்யா,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவர் 3-ஆம் வகுப்பு பயிலும் போது, மில் தொழிலாளியான அவரது தந்தை செந்தில் குமார் விபத்தில் சிக்கி பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தார்.
இதையடுத்து படிப்பில் ஆர்வம் கொண்ட மகனை, தாய் ஆனந்தி , கூலி வேலை செய்து 8 ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதன்பின்னர் உறவினர் ஒருவரின் உதவியுடன், பயின்ற ஜெயசூர்யா, +2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். தற்போது. மருத்துவம் பயின்று, ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறுகிறார் ஜெயசூர்யா.
ஆனால் கூலி வேலையில் கிடைக்கும் ஆனந்தியின் ஊதியம், அவரது கணவரின் மருத்துவச் செலவுக்கே பற்றாக்குறையாக இருக்கிறது. இந்த சூழலில் , முதலிடம் பிடித்த தனது மகனை, மருத்துவராக்க முடியுமா என கவலைப்படுகிறார் ஜெயசூர்யாவின் தாய் ஆனந்தி.
ஆழ்ந்த கோமாவில் இருந்த ஜெயசூர்யாவின் தந்தை, அண்மையில் தான் சுயநினைவுக்குத் திரும்பினார். தனது மகன், சாதனை படைத்த போதிலும், அவரின் மருத்துவக் கல்வி கனவை தன்னால் நனவாக்க முடியாத நிலையில் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
ஜெயசூர்யாவின் மருத்துவக் கல்வி செலவுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.